வடு


கையில் ஒரு சீப்பு வாழைப்பழத்தை வாங்கி வந்த அவன் அந்தப்பெண்மணி எங்கே எங்கே என்று தேடினான்.எந்தப்பெண்மணி த்தேடினான் என்பதைச்சொல்லி ஆரம்பித்தால்தான் சரியாக இருக்கும் உங்களுக்கு தெரியாத புதிய விஷயம் ஒன்றுமில்லை. ஆண்டு தோறும் வரும் .மார்ச் மாதம் எட்டாம் தேதி இது மகளிர் தினம்.அவன் அலுவலகம் உற்சாகத்தோடு கொண்டாடும் திருநாள்.சிறப்பு அழைப்பாளராய் வந்திருந்த பெண்மணி சென்னையிலிருந்து வந்திருந்தார்.அவர் புரசைவாக்கம் ஒரு அரசு வங்கியில் வேலைபார்க்கிறார். நடுத்த்ர வயதுக்காரர்.சட்டம் படித்தவர்.
இந்த சமுத்திரகுப்பத்து வங்கி ஊழியர்கள் குறிப்பாக உழைக்கும் ப்பெண்கள் கூடிக்கொண்டாடும் ஒரு விழா. அதற்கு வருகின்ற ஒரு பெண் பேச்சாளர் என்றால் ஒன்றும் லேசுப்பட்ட சமாச்சாரம் இல்லை.அந்தப்பெண்மணியைத்தான் அவன் தேடுகிறான்.
‘யாரத்தேடுரீங்க சாரு’ அருகிலில் நின்றிருந்த ஒரு ஆட்டோக்காரன் அவனிடம் கேட்டான்.
” இல்லை வாழைப்பழம் வேணும்னு அந்த லேடி கேட்டாங்க. வாங்கப்போனேன். நானு வர்ரத்துக்குள்ள போயிட்டாங்கன்னா எப்படி’
”சார் நீங்க அப்படி நவுந்தீங்க அவுங்க ப்ட்டுன்னு நின்னுகினு இருந்த ஆட்டோவுல ஏரி குந்துனாங்க பஸ் ஸ்டேண்டு போவுணும் வண்டி எடுன்னு சொன்னாங்க போயிட்டாங்க. பாத்துகிட்டேதானே இருக்கேன்”
‘இல்ல என்னை வாழப்பழம் வாங்கியாங்கன்னு சொன்னவங்க. அதுக்குள்ள ஆட்டோவுல ஏறிகினு போயிடுவாங்களா’
‘சார் நான் சொல்லுறன் அவுங்க உங்களை வாழைப்பழம் வாங்க போகச்சொன்னதே உங்க்கிட்டே இருந்து தப்பிச்சி கிட்டு ப்போக இருக்கலாம்.என்னா சொல்லுறீங்க’ என்றான் ஆட்டோக்காரன்.
அவன் பதில் எதுவும் சொல்லாமல் இருந்தான். ஆட்டோக்காரன் இவ்வளவு பேசுவது சரியில்லை. வேறு ஏதோ நல்ல வேலைக்குப்போக வேண்டிய ஆசாமி ஆட்டோ ஓட்ட மாட்டிக்கொண்டான் போல..அவனுக்கு எரிச்சலாய் வந்தது.
மகளிர்தினக்கூட்டத்திற்கு வந்தவர்கள் அவனிடம் நடந்து முடிந்த நிகழ்ச்சிக்காக வாழ்த்தும் பாராட்டும் சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.
‘வருடம் தவறாம இத செய்யுறீங்க. அதுலயும் இந்த வருடம் ரொம்ப சிறப்பு’ என்றார் ஒரு தனியார் வங்கி அதிகாரி.அவர் வேறு யாருமில்லை. அவன் வேலைசெய்யும் அதே கிளை அலுவலகத்தில் அவருக்கு கணக்காளர் வேலை..அவன் பக்கத்து இருக்கைக்காரர்.
சமுத்திரகுப்பத்து அர்சுப் பெரிய வங்கியின் மேலாளர் ஒரு வட இந்தியப்பெண். முழுக்கால் சட்டையும் பொருத்தமே இல்லாத ஒரு டாப்ஸ்ம் அணிந்திருந்தாள்.’ அவள் அவனிடம் வந்து இரு கைகளை க்கூப்பினாள்.
‘யூ அ மேல் அண்ட் யு ஆர் டூயிங்க் அ வொண்டர்ஃபுல் ஜாப்.மை கங்க்ராடஸ் டூ யூ அன்ட் யுவர் டீம்.சம்திங்க் அன்ஃபர்கெட்டபல் இன் மை லைஃப் குளோரியஸ் விமன்ஸ்டே.ஐ பார்டிசிபேடட் டுடே’
அவன் நெகிழ்ந்து போனான்.புன்னகை செய்தான். நிகழ்ச்சி நிறைவாக இருந்ததை அந்த அதிகாரி சொல்லும்போது.அவனுக்கு ஜில்லென்று இருந்தது.
சமுத்திரகுப்பத்து பக்கத்து ஊர்க்காரர்கள் வங்கி ஊழியர்கள்தான் அவனிடம் வந்து நின்றுகொண்டார்கள்.
‘சார் இந்த அம்மாவை எப்பிடிப்புடிச்சிங்க.எங்க வங்கியிலதான் ப்புரசவாக்கம் கிளையில இருக்குறாங்க ஆனா எங்களுக்கு தெரியலே.என்னா சார் கொடுமை இது.அவுங்க தொடாத விஷயமே இல்லயே.மும்பை கெம் ஆஸ்பிட்டல்ல ஒரு நர்சை இருவது வயசுல கற்பழிச்சி இருக்கான் ஒரு அயோக்கியன். அந்த பொண்ணு நாற்பது வருஷமா கோமாவுல கெடந்து அழிஞ்ச சோகத்தை அவுங்க சொன்னப்ப கூட்ட்த்துக்கு வந்திருந்தவங்க எல்லாருக்கும் கண்ணு கலங்கியிருந்ததை நீங்க கவனிச்சிங்களா.அந்த மும்பைப்பொண்ணு மட்டும் சாபம் விட்டா இந்த நாடே பற்றி எரிஞ்சி சாம்பலாயிடாதான்னு ஒரு கேள்வி வச்சாங்க்ளே அப்பப்பா என்னா பேச்சு என்னா பேச்சு’.
சொல்லிக்கொண்டே போனார் ஒரு மூத்த பெண் தோழியர்.’அவுங்க் விலாசம் போன் நெம்பர் எனக்கு கொடுங்க இன்னும் எதாவது முக்கியமான கூட்டம் அது இதுன்னா அவுங்களை கூப்பிட்டுக்குவோம்’
கூட்டத்திற்கு வந்த உள்ளூர் பத்திரிகை நிருபர்கள் அவனிடம் சொல்லிக்கொண்டு விடை பெற்றார்கள்.
‘ இலங்கை யாழ்ப்பாணத்துல இனப்படுகொலை நடந்த அப்ப அங்க போய் நிகழ்ந்த வன்கொடுமை அத்தனையும் படம் புடிச்சி கொண்டுவந்தாங்க. அந்த சென்னை ப்பொண்ணு பிரியம் வதா. அந்த பத்திரிகையாளர் பத்திப்பேசுனது எங்களுக்குப்பெருமை’ என்றார் ஒரு நிருபர்.
அவன் தன் கையில் இன்னும் அந்த வாழைப்பழ சீப்பை வைத்துக்கொண்டுதான் எல்லோரிடமும் பேசிக்கொண்டிருந்தான்.
அவன் அந்த வங்கியில் மகளிர் அனைவரும் கூடிக்கொண்டாடும் அந்த விழாவுக்கு அத்தனை ஒத்தாசை செய்வான்.மேடையில் மகளிர் மட்டுமே அமர்ந்து அலங்கரிக்க வேண்டு மென்று யோசனை சொன்னான்.மகளிர் தின விழா அழைப்பிதழில் ஆண்கள் பெயர் ஒன்று கூட இடம் பெறக்கூடாது என்பதை வலிய்றுத்தியவன் அவன்தான்.தமிழ்த்தாய் வணக்கத்திலிருந்து நன்றி நவிலல் வரை பெண்கள் மட்டுமே நிகழ்த்தவேண்டும் என்று யோசனை வைத்தான்.நிகழ்ச்சியை அவன் ஒரு ஓரமாக நின்றுமட்டுமே கவனிப்பான்.ஆனால்; நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர் யார் வரவேண்டும் எத்தனை மணித்துளிகள் அவருக்குக்கொடுக்கவேண்டும் என்பது சொல்லுவான்.கூட்டம் கறாராக எட்டரை மணிக்குள் முடிக்கப்பட வேண்டும் என்பதில் எச்சரிக்கையாக இருப்பான்.அப்போதுதான் உழைக்கும் பெண்கள் கூட்டத்திற்கு தவறாது நம்பிக்கையோடு வருவார்கள் என்று பேசுவான்.தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்று யார் பெண் விடுதலைக்கு க்குரல் கொடுக்கிறார்களோ அவர்கள் எல்லோரும் சமுத்திரகுப்பம் வந்து போனவர்கள்தான்.அங்கே அந்த மேடையில் முழங்கியவர்கள்தான்.
கூட்டத்திற்கு அழைக்கப்பட்ட போட்டோக்காரன் அவனிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினான்.
‘ அம்மா பேசுனது என் நெஞ்ச தொட்டுது. என் ஊரு மயிலாடுதுறை பக்கம். அந்த தில்லையாடி. வள்ளியம்மையை இப்படி சிறப்பாக ச்சொல்லுறதுன்னா அதுக்கு எவ்வளவு விஷயம் அந்த அம்மாவுக்குப் பிடிபட்டு இருக்கணும். தெய்வத்தமிழ் பேசுன காரைக்கால் அம்மையாரைத்தான் விட்டு வச்சாங்களா. எல்லாத்தையும்தான் கூட்டத்துல பேசுனாங்க.போதும் சாரு இப்படி ஒரு கூட்டம் போட்டா.போதும்’ போட்டோக்காரன் நிறைவாச்சொல்லிவிட்டுகக்கிளம்பினான். வழக்கமாய் வரும் பிலிப் மைக் செட் காரனும் சேர் டேபிள் வாடகைக்கு வண்டியில் கொண்டுவந்த சுல்தான் பாயும்’ ரொம்ப ஜோர் கச்சிதமா நடந்தது கூட்டம். நல்ல கும்பல் அய்யா ஏற்பாடுல்ல’ என்றனர்.
கடைசியாய் க்கூட்டத்தை முன்னின்று நடத்திய பெண்கள் அமைப்பின் தலைவி அவனிடம் வந்து.
‘ சமுத்திரகுப்பத்து தமிழ் அமைப்பிலேந்து எல்லோரும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தாங்க.சங்கு வளவதுரையனும் பேர்ராசிரியர் பாசுகரனும் வக்கீல் மன்றவாணனும்,விமரிசகர் ரகுநாதனும் எல் ஐ சியில வேல பாக்குற படைப்பாளி ஜெயஸ்ரீயும் , கவிஞ்ர்கள் கோவிஜேயும் பால்கியும் புலவர் அரங்க நாதனும்,திசைஎட்டும் குறிஞ்சிவேலனும் தமிழாசிரிய பானுமதியும் வந்திருந்தது ரொம்ப ரொம்ப சிறப்புங்க அந்த பேச்சாளர் அம்மா சென்னைக்கு பஸ் ஏறிட்டாங்களா.போக வர பேருந்து கட்டணம் அதோட எல்லாமா சேத்து ரூபாய் அய்நூறு கவர்ல வச்சி கொடுத்தேன். என்னா நினைக்கிறாங்களோ’
‘ இதுல என்ன இருக்கு நினைக்கிறதுக்கு அவுங்க உள்ளத்துல கனலா இருக்குற அந்த .உணர்வுதான் அவுங்களை இங்க் வரவழிக்குது நம்ம கொடுக்குற காசா அவுங்களை. இங்க வரவழிக்குது’.ஏதோ அவனுக்குத்தெரிந்தவரை நீட்டி ப் பேசினான். பேசியது சரியாகத்தான் இருக்கும் என்று எப்போதும் போல் நினைத்துக்கொண்டான்.
அவன் சைக்கிள் மட்டும் அலுவலக வாயிலில் அநாதையாக நின்றுகொண்டிருந்தது.இப்போது அவன் மட்டுமே அலுவலக வாயிலில் இருந்தான்.வங்கிக்கு வாட்ச்மென் போட்டு வேலை பார்த்தது அந்தக்காலம். அதெல்லாம் மாறி ஆண்டுகள் பல ஆகிவிட்டது. கணக்குத்தணிக்கைசெய்பவர்கள் ஒரு குடும்பத்தின் விளக்கு எரிவது பற்றி எல்லாம் கவலைப்படுவார்களா என்ன.அவர்கள் சிவப்பு மையினால் எந்தக்கணக்கையாவது சுழித்துவிட்டால் கதைகந்தல். ஆண்டு முழுவதும் பார்த்தவேலைக்கும் வாங்கிய சம்பளத்திற்கும் பதிலை யார் சொல்வது.
கைவசமிருந்த வாழைப்பழ சீப்பை சைக்கிள் காரியரில் பத்திரமாக வைத்துவிட்டு ஏறி மிதித்தான்.வண்டி நெளித்துக்கொண்டு புறப்பட்டது. சென்னயிலிருந்து கூட்டம் பேச வந்த அந்தப்பெண்மணி தன்னை த்தப்பாக நினைத்தாரா, தன் அந்தஸ்துக்கு இந்த கூட்டம் எல்லாம் எம்மாத்திரம் என்று முடிவு செய்தாரா கூட்டத்தில் போர்த்திய சால்வை கசங்கி கிசங்கி இருந்ததா, கூட்டத்திற்கு வந்துபோக கொடுத்த பணம் ரொம்ப குறைச்சலா ஒரே குழப்பமாக இருந்தது.. கைபேசியை எடுத்து அந்தப்பெண்மணிக்கு ஒரு அழைப்பு போட்டான். மீண்டும் போட்டான்.ஒன்றும் கதை ஆகவில்லை.ஆகவேயில்லை.
தன் குடிய்ருப்பு நோக்கி சைக்கிளை மிதித்தான்.காரியரில் வாழைப்பழம் பத்திரமாக இருப்பதைத் திரும்பிப்பார்த்து உறுதி செய்து கொண்டான்.
தன் வீட்டு வாயிலில் அவன் மனைவி இன்னும் இரவு உணவு சாப்பிடாமல் அமர்ந்து கொண்டிருந்தாள்.
” கூட்டம் முடிஞ்சு எல்லாரும் வந்துட்டாங்க நீங்கதான் லேட்டா வர்ரீங்க்’
” என்ன செய்யுறது கூட்டத்திற்கு பேசவந்த அந்த அம்மாவை சென்னைக்கு அனுப்பி வச்சிட்டுதான நான் வரணும்’
‘ சரி வுடுங்க. நானு பேச என்னா இருக்குது. என்னா சைக்கில் காரியர்ல வாழைப்பழமா அதிசயண்டா இது இண்ணைக்குதான் நான் ஒருத்தி இருக்குறத் ஞாபகம் வந்துதுபோல’
‘ஆமாம். உனக்குன்னுதான் ரஸ்தாளி பழம் ஒரு சீப்பு நல்லா இருக்கேன்னு வாங்கிவந்தேன்’
‘பழத்தை சைக்கிள் காரியர்ல வச்சா எங்கனா உருப்ப்டுமா. பாருங்க இங்க் சீப்புல பழக்காம்புவ மட்டும் பத்திரமா இருக்கு பழம் எல்லாம் இரும்பு கம்பி அழுத்தி நசுங்கி வீணா போயிருக்கு’
அந்த வாழைப்பழச்சீப்பை அவன் கையில் எடுத்துக்கொண்டு வீட்டின் உள்ளே கம்பீரமாய் நுழைந்தான்.


Like it? Share with your friends!

106
, 106 points

Jeffry is a Mechanical Engineer by education and an aspiring writer and blogger. After working hard for around 12 hours a day on his core job, he spends his remaining time in blogging and reading articles online. And he loves to make poor jokes, so be prepared.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

log in

reset password

Back to
log in