புலிக்கு உடம்பில் கோடு வந்தது எப்படி? | நகைசுவை அறிவு கதைகள்| Tamil stories


புலிக்கு உடம்பில் கோடு வந்தது எப்படி? | நகைசுவை அறிவு கதைகள்

ஒருநாள் வயல்வெளியில் புலி ஒன்று எருமையைச் சந்திக்க நேரிட்டது.
அப்போது எருமையைப் பார்த்த புலி, “”நீ உருவத்தில் பெரிதாக இருக்கிறாய். உன்னைப் பார்த்தால் பலசாலி போலவும் தெரிகிறது. ஆனால், உன்னை விட உருவத்தில் சிறியவனான மனிதன் உன் முதுகில் முகத்தடியை வைத்து நிலத்தை உழ வைக்கிறான். அப்படி உன்னை ஆட்கொள்கிற அளவிற்கு அவனிடம் என்ன சக்தி இருக்கிறது,” எனக் கேட்டது புலி.
 “”எனது எஜமானனிடம் அறிவு இருக்கிறது,” என்றது எருமை.
“”அறிவு என்றால் எத்தகைய அறிவு?” என்று புலி கேட்டது.
“”எனக்குச் சரியாகத் தெரியவில்லை. ஆனால், எனது நண்பர்கள் எல்லா விலங்குகளையும் ஆட்டிப் படைக்கும் அறிவு மனிதனுக்கு இருப்பதாகக் கூறினர்,” என்றது எருமை.
“”அப்படியென்றால் எனக்கும் அந்த அறிவு கிடைக்குமா?”
“”அதை எனது எஜமானரிடம் கேட்டால்தான் தெரியும். இதோ அவரே வருகிறார்,” என்றது எருமை.
அந்த நேரம் பார்த்து அங்கே எருமையின் எஜமானன் வந்து சேர்ந்தான். அவனுக்குப் புலியைக் கண்டதும் நடுக்கம்.
‘இனி இங்கிருந்து ஓடினால் புலி நம்மை அடித்துக் கொன்று விடும். அதனால் நடப்பது நடக்கட்டும்’ என்று அசட்டுத் துணிச்சலில் ஓடாமல் அங்கேயே நின்று கொண்டான்.
அப்போது புலி விவசாயியிடம் கேட்டது.
“”நாங்கள் அறிவைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். எனக்கு அறிவைப் பற்றிச் சொல்லுங்கள். அது எனக்கு கொஞ்சம் கிடைக்குமா?” என்றது.
அதைக் கேட்டதும்தான் விவசாயிக்கு நிம்மதிப் பெருமூச்சு வந்தது.
“இனி இந்தப் புலி நம்மை ஒன்றும் செய்யாது’ என்று நினைத்த அவன், “”அறிவை நான் வீட்டில் வைத்திருக்கிறேன். அதை உனக்கு கொஞ்சம் எடுத்து வருகிறேன். அதனால் இங்கிருந்து நீ போய் விடாதே,” என்று புலியிடம் கேட்டுக் கொண்டான்.
புலியும், “இனி காட்டு விலங்குகள் எல்லாம் நாம் சொன்னபடி நடக்கும்’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு “”நான் எங்கும் போய் விட மாட்டேன். இங்கேதான் இருப்பேன்,” என்றது.
“”நான் போன பிறகு எருமையை நீ அடித்துச் சாப்பிட்டு விடமாட்டாயே?”
“”நிச்சயம் சாப்பிட மாட்டேன்!”
“”சரி, உன்னைக் கட்டிப் போட்டால் தப்பாக எடுத்துக் கொள்ளமாட்டாயே?”
“”மாட்டேன்!”
புலி அப்படிச் சொன்னதும் அதைப் பிடித்து ஒரு மரத்தில் விவசாயி இறுக்கமாகக் கட்டிப் போட்டான். பிறகு, “”இந்தக் கட்டு களை அவிழ்த்து விட்டு நீ போய் விட்டால் அதற்கு நான் பொறுப்பு அல்ல,” என்றான் விவசாயி.
புலியும், “”சரி!” என்றது.
“”ஒரு நிமிடம்… அறிவு என்னிடமே இருக்கிறது. நான்தான் மறந்து போய் வீட்டி லிருக்கிறது என்று சொல்லிவிட்டேன்,” என்றான்.
“”அப்படியா? உடனே அதை எனக்கும் கொஞ்சம் கொடு,” என்றது புலி.
“”இதோ, என்றவாறே ஒரு தடியை எடுத்து புலியைக் கண்,மண் தெரியாமல் அடிக்க ஆரம்பித்தான் விவசாயி. அவ்வளவுதான், புலி வலியால் துடிதுடிக்க ஆரம்பித்தது.
“”ஏய்! முட்டாள் விவசாயி… என்னை எதற்கு அடிக்கிறாய்?”
“”நீதானே அறிவை கேட்டாய். அதைத்தான் உன்னிடம் காண்பிக்கிறேன். இனி நீ எனது எல்லைப் பகுதிக்குள் காலடி எடுத்து வைத்தால் அவ்வளவுதான் கொன்றே விடுவேன்,” என்று சொல்லிவிட்டு விவசாயி அங்கிருந்து சென்று விட்டான்.
புலிக்கோ உடல் முழுக்க சரியான ரத்தக்காயம்… எப்படியோ போராடி கட்டுக்களை அவிழ்த்துக் கொண்டு, தப்பித்தோம், பிழைத்தோம் என்று அங்கிருந்து ஓடிவிட்டது.
புலியின் மீது பட்ட அடிதான் நாளடைவில் அதன் கோடுகளாகிப் போனதாம். புலியின் உடலில் கோடுகள் இருப்பதற்கு வியட்நாமிய கிராம மக்கள் இப்படியொரு கதையை கூறுகின்றனர் குட்டீஸ்… புலிக்கு கோடு  வந்தது எப்படின்னு தெரிஞ்சுகிட்டீங்களா?
கதை தானே ஜாலியா எடுத்துக்கோங்க!

Like it? Share with your friends!

282
, 282 points

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

log in

reset password

Back to
log in