ஒத்தையடிப்பாதை – Tamil short story


ஒற்றைப்பனைமர ஓலையின் சலசலப்பு சத்தமே மனதில் கிலி ஏற்படுத்தும் நடுச்சாமத்தில், தன் நிழலே தன்னை பயமுறுத்தும் கும்மிருட்டில்…ஊரடிங்கிய நேரத்தில் அந்த ஒத்தையடிப்பாதையில் பஞ்சவர்ணம் ஓட்டமும் நடையுமாக ஊரை நோக்கி வந்து கொண்டிருந்தான் நடக்கவிருக்கும் விபரீதம் அறியாதவனாக…!!!

வரும் வழியில் சோக்காய் சட்டைபோட்ட சோலைக்கொல்லை பொம்மை கூட அரிவாளோடு நிற்பது போல் பயமுறுத்தியது…

அவன் மனம் ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது என்ற எண்ணத்தோடு பயணப்பட்டது… ஏனென்றால் நிறைய நிகழ்வுகளை நண்பர்கள் சொல்லியது இப்போது நினைவில் வந்து சலனப்பட வைத்தது…!!!

தூரத்தில் யாரோ தன்னை நோக்கி ஓடி வரும் சத்தம் கேட்டு தைரியத்தை வரவழைத்து திரும்பி பார்த்தான், அந்த அமாவாசை கும்மிருட்டில் ஏதும் புலப்படவில்லை…

மூங்கில் சத்தமும், முல்லைப்பூவின் வாசமும் அவனது காதையும் மூக்கையும் துளைத்து எடுத்தது, மீண்டும் தனக்கு பின்னால் யாரோ நடந்து வரும் சத்தமும் அதை தொடர்ந்து பேர் சொல்லி அழைப்பது கேட்டு திரும்பி பார்த்தான், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஏதும் தென்படவில்லை…

சற்று தூரத்தில் பாதி கட்டி முடிக்கப்படாத அந்த வீட்டின் ஹாலில் தொங்க விடப்பட்டிருந்த அரிக்கேன் விளக்கு இங்கு மங்கும் ஆடிக்கொண்டிருந்தது காற்றில்…சிறு பூச்சி சத்தம் கூட ஒலிபெருக்கியில் எதிரொலிப்பது போன்று கேட்டது…

அதே நேரத்தில் ஏதோ எரியும் வெளிச்சம்… அது அன்று உயிர் போன மெய் எரியும் வெளிச்சமா? அல்லது அர்த்த ராத்திரியில் எரியும் சொக்கப்பனையா… குழம்பியவனாக…!!! தைரியம் கொஞ்சம் சரிய தொடங்கி முகம் வியர்க்க ஆரம்பித்தது …மெல்லிய காற்று அவனைத் தழுவினாலும்…நடையின் வேகத்தை அதிகப்படுத்தினான்…

நாய் ஊளையிடும் சத்தம் யாரோ ஒருவர் அவன் காதருகில் அழுவது போன்று கேட்டது…எங்கோ கத்தும் பூனையின் குரல் குழந்தை அழும் சத்தமாய் கேட்க அதற்கு மேல், அவன் தைரியம் அவனுக்கு துணை நிற்கவில்லை எடுத்தான் ஓட்டம்…என்ன செய்வதென்று தெரியா மனநிலையில்… ஏதோ தடுக்கியவனாய் மடாரென கீழே விழுந்தான்…

விழித்துபார்த்தால், அவனைச்சுற்றி ஒரே கூட்டம்…

என்னாச்சு பஞ்சவர்ணம்? ஏன் இப்படி தலை தெரிக்க ஓடிவந்தே? என்று கூட்டத்தை விளக்கிக்கொண்டு கருப்பு போர்வையோடு அங்கு வந்த முதியவர்..

ஏம்பா நான் மட்டும் உன் பின்னால வரலைனா என்ன ஆகியிருக்கும்!!!

என்ன புள்ள நீ? உன் பெயரைச் சொல்லி கூட கூப்பிட்டேன்…திரும்பி பார்த்துக்கிட்டு நீ பாட்டுக்கு வந்துட்டே…ஆமாம் அப்போ ஏன் தீடீர்னு ஓட்டம் பிடிச்ச?

என்ன இளவட்ட புள்ள நீ தைரியம் வேண்டாமா??? என்று குளிருக்கு இழுத்துப்போர்த்திய அந்த கருப்பு போர்வையுடன் கிளம்பினார் அந்த முதியவர்…

கற்பனையும், கண்டதையும் கலந்து தைரியத்தை கைவிட்டதை எண்ணி வெட்கப்பட்டவனாய்…எழுந்து நடக்க ஆரம்பித்தான் வீட்டை நோக்கி…!!!

-சலீம் கான் (சகா)

Search Keywords:

ஒத்தையடிப்பாதை, Tamil short stories, தமிழ் கதைகள்


Like it? Share with your friends!

159
, 159 points

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

log in

reset password

Back to
log in