அனுபவம்- தமிழ் கதைகள் |Tamil stories


தாமஸின் நாள் நன்றாகவே ஆரம்பிக்கவில்லை. என்றும் இல்லாமல் இன்று காலையில் அவன் எழுந்ததே தாமதமாகத் தான் எழுந்தான். அவசர அவசரமாகக் குளிக்கும் போது சோப்பு கண்ணில் பட்டு காந்த ஆரம்பித்து விட்டது. பள்ளிக்கு வேகவேகமாகக் கிளம்பி சைக்கிளில் பயணப்பட்டபோது டயர்களில் காற்று வெடித்து விட்டது. இப்படிப்பட்ட அவசரத்திற்கு என்று அப்பா கொடுத்திருந்த பணம் இன்று பார்த்து அவனுடைய பென்சில் பெட்டியில் இல்லை. நேற்று இரவு பாடங்களைப் படிக்கும் போது அவனது ஆறு வயது தங்கை அவனுடைய பென்சில் பெட்டியோடு விளையாடிக் கொண்டிருந்தது ஞாபகம் வந்தது, பல்லைக் கடித்து எரிச்சலை அடக்கிக் கொண்ட தாமஸ் சைக்கிளை உருட்டிக் கொண்டே பள்ளி வந்து சேர்ந்தான். அவன் மனதுக்குள் கணக்கிட்ட படியே இருபது நிமிடம் தாமதமாகப் பள்ளியை அடைந்தான். பள்ளியின் கதவுகள் மூடப்பட்டு விட்டன. இனி, தலைமை ஆசிரியர் வந்து தாமதமாக வந்ததற்கு தண்டனை கொடுத்தபின்தான் உள்ளே போக முடியும். அவனுடைய விருப்பப் பாடமான தமிழ் முழுவதையும் தவற விட்டு விடுவான். பொங்கி வந்த கண்ணீரை அடக்கிக் கொண்டு தலைமை ஆசிரியருக்காகக் காத்திருந்தான்.

காலை நேரப் பிராத்தனைக் கூட்டம் முடிந்தவுடன் பள்ளிக்கு வெளியே வந்த தலைமை ஆசிரியர் தாமதமாக வந்த அனைவரையும் கண்டித்து உள்ளே அனுப்பினார். “அப்பாடி” என்று பெருமூச்சு விட்ட தாமஸ் வேகவேகமாக வகுப்பறைக்குள் சென்றான். அவனுக்கு அங்கும் சோதனை காத்திருந்தது. நேற்று பாடுபட்டுச் செய்த வீட்டுப் பாடங்களை வீட்டிலேயே மறந்து வைத்து விட்டு வந்து விட்டான். கணக்கு ஆசிரியரிடம் சரியான மண்டகப்படி கிடைத்ததோடு வாசலில் முழங்கால் போடவும் வைத்து விட்டார்.

Also read : Tamil stories

அவமானமாக இருந்தது தாமஸுக்கு. குனிந்த தலையுடனே அன்று முழுவதும் பள்ளியில் இருந்தான். மற்ற மாண்வர்கள் அவன் தாமதமாக வந்ததையும் அவன் தண்டனை வாங்கியதையும் சொல்லிச் சொல்லி அவனைப் பரிகசித்தார்கள். எதுவும் செய்ய முடியாமல் எல்லாவற்றையும் அமைதியாக எடுத்துக் கொண்டான் தாமஸ். துக்கத்தில் அவன் மிகவும் சொர்ந்து போயிருந்தான். நண்பர்களின் கிண்டலை எதிர்த்து எதுவும் செய்ய அவனுக்குத் தோன்றவில்லை. அவனுக்காகப் பரிந்து பேசக்கூட யாரும் இல்லை. ஏன் இன்று முழுவதும் எல்லாம் கெட்டதாகவே அவனுக்கு நடக்கிறது? அவனுக்குப் புரியவில்லை. எப்போதான் இந்த நாள் முடியுமோ என்று காத்திருந்தான்.

மாலையில் காற்று இல்லாத சைக்கிளைத் தள்ளிக் கொண்டு சோர்வாக வீடு திரும்பினான் தாமஸ். அவனுக்காக சோர்வாகக் காத்திருந்த தாயைப் பார்த்ததும் நாள் முழுவதும் அடக்கி வைத்திருந்த அழுகை பொத்துக் கொண்டு வந்தது. ஓடிப் போய் தாயைக் கட்டிக் கொண்டு அழுதான். அவன் தலையை ஆதரவாகக் கோதிய அவன் தாய், “முதலில் வந்து சாப்பிடு தாமஸ், சாப்பிட்டானதும் உனக்கும் தெம்பு வரும்” என்று அவனை உணவு உண்ண அழைத்துச் சென்றார்.

தாய் அவனுக்கு அளித்த உணவை உண்டு கொண்டே அன்று நடந்தவற்றை அழுகையுடனே சொல்லி முடித்தான் தாமஸ். “ஏம்மா எனக்கு இப்படி நடக்கிறது? நான் என்ன தப்பு செய்தேன்? காலையிலேயே எப்போதும் சீக்கிரம் எழும் நான் இன்று கொஞ்சம் தாமதமாக எழுந்ததினால் எனக்கு இத்தனை பெரிய தண்டனையா? எனக்கு ஒன்றுமே புரியவில்ல” என்று சொல்லி விட்டு அழுதான். அவன் அழுது முடிக்கும் வரை காத்திருந்த அவனுடைய தாய் பிறகு சொன்னாள், “தாமஸ் நமக்குத் துன்பம் வரும் போது அதை ஒரு சோதனையாக எடுத்துக் கொள்ளவேண்டும். இப்படி துக்கத்தில் துவண்டு விடக் கூடாது. சோதனையில் பாடங்கள் படிப்பவனே புத்திசாலி. உனக்கு இன்று ஏற்பட்ட அனுபவங்கள் என்றாவது ஒரு நாள் நல்ல முறையில் உனக்குப் பயன்படும் பார்” என்று அவனைத் தேற்றி விளையாட அனுப்பினார் தாய்.

மாலையில் வீட்டுப் பாடங்களைச் செய்து கொண்டிருந்தான் தாமஸ். அவனுடைய தந்தை அழைத்தார், “தாமஸ் என் பேனாவின் முனை உடைந்து விட்டது. போ, போய் கடையில் எனக்கு ஒரு பேனா முனையும் பேனா இங்க் ஒரு பாட்டிலும் வாங்கிவா.” தயங்கிய படியே தந்தையிடம் பணத்தை வாங்கிய தாமஸ் கடைக்குச் சென்றான். பொறுப்பை ஏற்றுக்கொள்ளவே அவனுக்குப் பயமாக இருந்தது. அவனுடைய துரதிர்ஷ்டம் அவனைப் பின் தொடர்கிறது என்று அவனுக்கு நன்றாகவே தெரியும் அப்பா கொடுத்த பணத்தைத் தொலைக்கப் போகிறேன், இல்லை இங்க் பாட்டிலை உடைக்கப் போகிறான். பின் அப்பாவிடம் திட்டு வாங்கப் போகிறேன் என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டு கடைக்குச் சென்றான். அதி கவனமாக அப்பா சொன்ன பொருட்களை வாங்கிக் கொண்டு வீடு திரும்பினான்.

வரும் வழியில் தெரு விளக்கோளியில் ஒரு முதியவர் உன்னிப்பாகக் கீழே எதையோத் தேடிக் கொண்டிருந்தார். அவரைப் பார்க்கப் பாவமாக இருந்தது தாமஸிற்கு. அவரை அணுகியவன், “தாத்தா என்ன தேடுகிறீர்கள்? எதையாவது தொலைத்து விட்டீர்களா? சொன்னால் நானும் உங்களுடன் சேர்ந்து தேடுகிறேன்” என்றான்.

உடனே அப்பெரியவர், “தம்பி நான் என் கையில் பேருந்துக் கட்டணம் வைத்திருந்தேன். அதைக் காணவில்லை. இங்கு எங்கோ தான் கைதவறி விழுந்திருக்க வேண்டும். அதைத்தான் தேடுகிறேன்” என்றார்.

தாமஸும் அவருடன் சேர்ந்து தேடினான், அவன் கண்களுக்கும் ஒன்றும் தெரியவில்லை. முதியவர் சோர்ந்து போனார். என்னவோ காலையிலிருந்து எனக்கு நேரம் சரியாகவே இல்லை என்று அலுத்துக் கொண்டார். அதைக் கேட்ட தாமஸிற்கு அன்னை சொன்னது நினைவிற்கு வந்தது. “அப்படியெல்லாம் சொல்லாதீர்கள் தாத்தா. இன்று நீங்கள் பணத்தைத் தொலைத்திராவிட்டால் நானும் நீங்களும் சந்தித்திருக்க முடியாது. உங்களுக்கு புதிதாய் ஒரு நண்பன் கிடைத்து விட்டான் என்று நினைத்துக் கொள்ளுங்கள். எனக்கும் இன்று எதுவுமே சரியாக நடக்கவில்லை. ஆனால் உங்களைச் சந்தித்த்தும் உங்களுக்கு உதவி செய்ததும் எனக்கு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றவன் கையிலிருந்த பணத்தைத் தாத்தாவிடம் கொடுத்தான். “நீங்கள் இதைப் பேருந்துக் கட்டணத்திற்கு வைத்துக் கொள்ளுங்கள். நான் அப்பாவிடம் சொல்லிக் கொள்கிறேன். தெரியாத அந்நியரிடம் பேசியதற்கு அவர் என்னைத் திட்டினாலும் பரவாயில்லை. உங்களுக்கு உதவியதில் எனக்கு மிக மகிழ்ச்சியே” என்றான்.

அவன் தோளில் தட்டிக் கொடுத்த அந்த முதியவர், “தம்பி, நீ எனக்குச் செய்திருக்கும் உதவியை நான் மறக்க மாட்டேன். நாளையே உன் தந்தையிடம் இந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன். நீ செய்த செயலுக்காக அவர் நிச்சயம் பெருமைப் படுவார். இப்போது எனக்குப் பேருந்துக்கு நேரமாகி விட்டது வரட்டுமா?” என்று சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்தார். வீடு நோக்கி நடந்தான் தாமஸ். நாள் முழுவதும் நடந்த துரதிர்ஷ்ட சம்பவங்கள் தன்னைப் புடம்போட்டு மற்றவர்களுக்கு உதவி செய்பவனாக மாற்றியதை எண்ணி மகிழ்ந்தான். இன்று அந்த முதியவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று தோன்றியதின் காரணமே தனக்கு இன்று கிடைத்த அனுபவங்களே என்று அவன் உணர்ந்து கொண்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அனுபவம்- தமிழ் கதைகள் |Tamil stories

log in

reset password

Back to
log in